பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுத்தையைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த போது நான்கு சந்தேக நபர்களையும் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலின் ஒரு பகுதியையும் பொகவந்தலாவ பொலிஸார் 14.02.2023 அன்று கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பகுதியில் வசிப்பவர்கள் என்பதுடன், அதனை அண்டிய சமனல இயற்கை சரணாலயத்தில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் இரை தேடி தேயிலை தோட்டத்திற்கு வரும்போது கம்பிக்கூடு அமைத்து பிடித்து கொன்றுள்ளனர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சிறுத்தையின் உடல் பாகங்கள் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

(அந்துவன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *