வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பயிர் மஞ்சளாகும் நோயைத் தடுப்பது, உரமிடுதல் உத்திகள் மற்றும் அரிசி விற்பனையில் உள்ள சிக்கல்கள் குறித்தும் இதன் போது ஆரயப்பட்டது.

விவசாயிகள் TSP உரங்களை பயன்படுத்துவதை குறைத்தமையே பயிர் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம் என விவசாய திணைக்களம் கண்டறிந்துள்ளதுடன், எதிர்வரும் சிறு போகத்தில் இந்நோய் வராமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

சேதன மற்றும் இரசாயன உர நிறுவனங்கள் வெவ்வேறு நிலைப்பாடுகளில் இருந்து உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாக இங்கு குறிப்பிடப்பட்டது. மேலும் இது தொடர்பாக பணியாற்றும் பல்வேறு அறிஞர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து செயல்படுவது உகந்தது என்றும் இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

எதிர்வரும் சிறு போகத்தில் TSP உரங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், பெரும்போகத்தை விட குறைந்த விலையில் உர வகைகளை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை விவசாயிகளுக்கு வழங்குவதன் முக்கியத்துவத்தை சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

விவசாயிகள் குறைந்த செலவில் உற்பத்தியை பெருக்கும் வகையில் மண்ணுக்கு தகுந்த பயிர் வகைகளையும், தகுந்த விவசாய உள்ளீடுகளை விவசாயத் திணைக்களம் பரிந்துரைத்தால், உள்ளீடுகளுக்கு ஏற்ற விளைச்சலை விவசாயிகள் பெற முடியும் என இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட உர நிறுவன பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

சவால்களுக்கு மத்தியிலும் கூட சந்தை தேவையை விட அதிக விளைச்சலை கடந்த போகங்களில் பெற்றுக்கொடுக்க எமது விவசாயிகளினால் முடிந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு சுட்டிக்காட்டினார்.

அரிசி மேலதிகமாக காணப்படும் தற்போதைய நிலையில் களஞ்சியசாலைகளில் கையிருப்பு உள்ள பழைய அரிசியை கால்நடை தீவனத்திற்கு விற்பனை செய்வது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் அரிசிக்கு உயர்ந்த விலை கிடைத்துவருவதோடு முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, வர்த்தக,வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து, விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தொடர்புள்ள அரச நிறுவன அதிகாரிகள், சேதன மற்றும் இரசாயன உர நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *