சீனாவில் கொரோனா தொற்று தொடர்ந்து தீவிரமாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், தங்கள் சொந்தங்களின் உடலை தெருக்களில் தகனம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாளுக்கு நாள் இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் சீன மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் சீன அரசு தளர்வுகளை அறிவித்த நிலையில், கொரோனா மேலும் வேகமாக பரவத் தொடங்கியது. ஷாங்காயில் தொற்றுநோய் பரவல் மிகவும் வேகமாக உள்ளது, மேலும் இது 70 சதவீத மக்கள்தொகையை எட்டியிருக்கலாம் என ருய்ஜின் மருத்துவமனையின் துணைத் தலைவர் சென் எர்ஜென் மற்றும் ஷாங்காயின் கோவிட் நிபுணர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், டிசம்பர் முதல் 20 நாட்களில் சீனாவில் 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக லண்டனை தளமாகக் கொண்ட பகுப்பாய்வு நிறுவனமான ஏர்பினிட்டியின் அறிக்கை கூறியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக தகனம் செய்ய இடம் இல்லாத காரணத்தாலும், தகனச் சடங்குகளின் விலை உயர்ந்துள்ள காரணத்தாலும், தெருக்களில் தங்கள் சொந்தகளின் உடல்களை தகனம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.