டெல்லியில் வருகிற 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்திய விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிரவும், பிற நாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் சீன அதிபர் ஜின்பிங் தவிர்க்க திட்டமிட்டு உள்ளார் என தகவல்கள் வெளிவந்தன.

இதுபற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் டெலாவர் நகரில் ரெகோபத் பீச் பகுதியில் நிருபர்கள் கேட்டபோது பதிலளித்த பைடன், ஏமாற்றமளிக்கிறது.

ஆனால், நான் அவரை சந்திக்க போகிறேன் என கூறினார். எனினும், ஜின்பிங்கை வேறு எந்த இடத்தில் சந்திக்க போகிறேன் என்ற தகவலை பைடன் கூறவில்லை.

சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் பதற்றநிலை அதிகரித்து காணப்படுகிறது. தைவான் விவகாரம், உளவு பலூன் விவகாரம் உள்ளிட்டவை எதிரொலித்த நிலையில், ஏற்றுமதி பொருட்களுக்கான பைடன் அரசின் தடை, கியூபாவில் இருந்து சீனாவின் கண்காணிப்பு வேலை உள்ளிட்டவற்றால் இரு நாடுகளின் பதற்றம் அதிகரித்தது.

எனினும், சீனாவுக்கு சமீபத்திய மாதங்களில் பைடன் அரசிலுள்ள அதிகாரிகள் அதிகளவில் சென்று, உறவை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றன.

இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பைடன் மற்றும் ஜின்பிங் இருவரும் கடைசியாக சந்தித்து கொண்டனர்.

தொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும்போது, ஜின்பிங்கை பைடன் சந்தித்து பேச கூடும் என தகவல் வெளியானது.

இதற்கேற்ப, இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்வார் என பைடன் கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டார்.

ஆனால், இந்தியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜின்பிங்கிடம் திட்டமில்லை என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஜின்பிங்கிற்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு பதிலாக வேறொரு நபர் பங்கேற்பார் என்றும் மற்றொருவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *