ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு, ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியிலும் நாட்டை சீர்குலைக்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் எமது நாட்டுக்கே பாதிப்பாக அமையும். எனவே, சந்தர்ப்பவாத அரசியலை விடுத்து, நாட்டை மீட்க எதிரணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்தார்.

வெற்றிபெற்றவரையும், முயற்சித்து தோல்வி அடைந்தவர்களையுமே வரலாறு நினைவில் வைத்திருக்கும். மாறாக வேடிக்கை பார்ப்பவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை. நாளை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால்கூட அதில் தற்போதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிபெறுவார் எனவும் அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் கடந்த வருடம் இதே காலப்பகுதியில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மின்வெட்டு அமுலானது. வரிசை யுகம் ஏற்பட்டது. உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 100 வீதத்தை தாண்டிச்சென்றது. இவற்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவு கட்டியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.  நாடு இவ்வாறு நெருக்கடி நிலையிலிருந்து மீளும்போது, எதிர்க்கட்சிகள் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

1991 ஆம் ஆண்டளவில் இந்தியாவிலும் இதேபோன்றதொரு நிலைமை ஏற்பட்டது. ஆனால் நாட்டை மீட்பதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்தன. மக்களுக்கு சேவை செய்தன. இதனால் தான் இந்தியா இன்று 5 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. எனினும், எமது நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு இந்தமனநிலை இல்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

பொருளாதார ஸ்தீரத்தை மறந்து, அரசியலுக்காக மக்களை திருப்திப்படுத்தும் வகையில் வரிக்கொள்கைகள் கொண்டுவரப்பட்டதாலேயே நாட்டுக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.   2000 ஆம் ஆண்டளவில் இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில்கூட ஏற்றுமதி 40 வீதமாக இருந்துள்ளது. தற்போது போர்கூட இல்லை. ஆனால் ஏற்றுமதி 20 வீதமாகவே உள்ளது. முறையற்ற சில சட்ட ஏற்பாடுகளும் பின்னடைவுக்கு காரணங்களாக அமைகின்றன. கடன் வாங்கியே நாடு நடத்தப்பட்டுள்ளதுடன், சொந்தகாலில் நிற்பது பற்றி சிந்திக்கப்படவில்லை. சிபேட்கோ நிறுவனம் பாரிய நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. மின்சார சபையும் இதே வழியில் தான் பயணித்துக்கொண்டிருக்கின்றது. வாங்கப்படும் கடன்களில் இவற்றுக்குதான் உயிர்கொடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

எமது நாட்டு ஜனாதிபதி தற்போது வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளார். செல்வந்தர்கள் மீதே வரிச்சுமை திணிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான சமூர்த்தி திட்டமும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே சமூர்த்தி பட்டியல் மீளாய்வு செய்யப்படுகின்றது. எனவே, மலையக மக்களும் இதற்கு கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேவேளை, உள்ளுராட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு 16 ஆயிரம் மில்லியன் ரூபா செலவாகும். அத்தேர்தலால் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது அமைச்சரவையோ மாறப்போவதில்லை. பொருளாதாரப் பிரச்சினைகளும் தீரப்போவதில்லை. நாம் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் அல்லர். நாளை ஜனாதிபதி தேர்தலொன்று நடத்தப்பட்டால்கூட அதில் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிபெறுவார். “ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *