போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்தியலுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட “சதராவ தீபனீ” என்ற கௌரவிப்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றது.
கலைப் படைப்புகளுக்குப் பங்களித்த கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வு இங்கு இடம்பெற்றதுடன், தர்மசிறி பண்டாரநாயக்க, பராக்கிரம நிரியெல்ல, சிரில் விக்கிரமகே ஆகிய சிரேஷ்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.
பேராசிரியர் ஆரியரத்ன எத்துகல, குமார திரிமாதுர, சரத் கொத்தலாவல, உள்ளிட்ட மூத்த கலைஞர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
கலாநிதி பந்துல குணவர்தனவின் கலைத்துறை குறித்து, பேராசிரியர் பிரனீத் அபயசுந்தர, ரஞ்சித் குமார, அருண குணரத்ன, தினுஷ குடாகொடகே ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களால், தொகுக்கப்பட்ட “சுபந்து சினிமா வத” நூல் வெளியீடும் இந்நிகழ்வுக்கு இணையாக இடம்பெற்றது.
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்திற்கு அமைய பாடசாலை மாணவர்களுக்காக வருடந்தோரும் நடைமுறைப்படுத்தப்படும் “பிரக்ஞா பந்து” புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இம்முறை உயர்தர தொழில்நுட்பம் கற்கும் 251 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதை முன்னிட்டு, அடையாள ரீதியாக 25 மாணவர்களுக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரினால் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வின் பிரதான உரையை சிரேஷ்ட திரைப்பட விமர்சகர் காமினி வேரகம நிகழ்த்தினார்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமாகிரி தர்ம மகா சபையின் மகாநாயக்க வண, இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள், கலைஞர்கள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.