இராகலை, ஹைபொரஸ்ட் பகுதியில் வாழ்வாதாரத்துக்காக வீதி ஓரத்தில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த மலையக பெண்ணிடம் அடாவடித்தனமாகவும், அராஜகமாகவும் நடந்துகொண்ட மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகி ஒருவர் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரையின் கீழ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கண்டிப்பான உத்தரவின் பிரகாரமே, மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எழுத்துமூலம் மன்னிப்பு கோருவதற்கும் மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ராகலை, ஹைபோரஸ்ட் பகுதியில் பிரதான வீதியில் ஓரத்தில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவ்விடத்துக்கு வந்த மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகி, அவ்விடத்தில் மரக்கறி விற்பனை செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்ட பெண்ணை கடும் தொனியில் மிரட்டி – அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பின்னர், மத்துரட்ட பிளான்டேசனுக்கு உடன் அழைப்பை ஏற்படுத்திய அமைச்சர் ஜீவன் தொண்டமான், குறித்த நிர்வாகியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

அவரை உடன் நீக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.

இதனை ஏற்ற பெருந்தோட்ட யாக்கம், அதிகாரியை உடனடியாக பணி நீக்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எழுத்துமூலம் மன்னிப்பு கோரவும் இணங்கியுள்ளது.

அதேபோல இனியும் அப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதெனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *