நானுஓயா லேங்டல் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது; தொழிலாளர் தேசிய சங்கம் நடவடிக்கை 

சிரேஷ்டஊடகவியலாளர் சோ.ஸ்ரீதரன்

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை தொடர்ந்து நானுஓயா சமர்செட் தோட்ட லேங்டல் பொட்ட தொழிலாளர்களின் பணி
நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த வாரம் லேங்டல் தோட்டத்தை சேர்ந்த 33 வயது உடைய கிருஷ்ணகுமார் என்ற தொழிலாளி வேலை விட்டு வீதியைக் கடந்து செல்லும் போது பாரவூர்தி மோதியதில் உயிரிழந்தார்.


வேலை நேரத்தில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து உயிரிழந்த தொழிலாளிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணி நிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப் போராட்டம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


இதனைத் தொடர்ந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கு இணங்க தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா மாநில இயக்குநர் சந்திரன் தலைமையிலான குழுவினர் இன்று தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினர்.


இதன் போது ஏற்பட்ட இணக்கப்பாட்டை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் நாளை முதல் வேலைக்கு திரும்புவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த பேச்சு வார்த்தையில் சமர்ப்பசெட் தோட்ட குறூப் முகாமையாளர் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாநில பிரதிநிதி ஐயன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிரோஷன் உட்பட தோட்ட தலைவர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *