அமெரிக்கா-சீனா இடையிலான உறவு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் கீரியும், பாம்புமாக சண்டையிட்டு வருகின்றன.

குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகளும் மோதலை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவின் புதிய வெளியுறவு மந்திரியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற கின் காங், முதல் முறையாக சீன நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அமெரிக்காவுடனான பிரச்சினை குறித்து அவர் பேசியதாவது:- அமெரிக்காவின் சீனக் கொள்கை பகுத்தறிவு மற்றும் ஒலி பாதையில் இருந்து முற்றிலும் விலகியிருக்கிறது. சீனா மீதான விரோத கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் தவறான பாதையில் தொடர்ந்து வேகமாக சென்றால் மோதல் ஏற்படுவது நிச்சயம்.

அமெரிக்காவின் இந்த பொறுப்பற்ற செயல் இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களையும், மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும்.

தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அமெரிக்கா அவமதிக்கிறது. தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்ட கூடாது.

தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா, சீனாவை ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *