நியூசிலாந்து நாட்டில் கேப்ரியல்லா சூறாவளி தாக்குதலால் ஆக்லாந்து, நேப்பியர் சிட்டி உள்பட பல்வேறு மாவட்டங்களில் அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நியூசிலாந்து நாட்டில் கேப்ரியல்லா சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. அந்நாட்டு வரலாற்றில் 3-வது முறையாக தேசிய அளவிலான அவசரநிலை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி, பே ஆப் ப்ளென்டி பகுதி, ஓபோடிகி, வகாதனே மாவட்டம், வைகாடோ பகுதி, தேம்ஸ்-கோரமண்டல், ஹவுராக்கி மாவட்டம், வைகாடோ மாவட்டம், தாராருவா மாவட்டம், நேப்பியர் சிட்டி மற்றும் ஹேஸ்டிங்ஸ் மாவட்டம் ஆகியவற்றில் முன்பே உள்ளூர் அளவிலான அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி சூறாவளி புயலை முன்னிட்டு குழந்தைகள், முதியவர்கள் உள்பட 2,500 பேரை வேறு இடங்களுக்கு அரசு குடிபெயர செய்து உள்ளது. இதுதவிர, ஹாவ்கே பே பகுதியில் வெள்ள நீர் மற்றும் புயல் பாதிப்பில் சிக்கி தவித்த 9 ஆயிரம் பேர் மீட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்காக 11 ராணுவ வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சூறாவளி தாக்கத்திற்கு பெண்ணின் வீடு மீது வங்கி ஒன்று இடிந்து விழுந்து உள்ளது. இதில் அவர் பலியானார். அந்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பாதுகாப்பு படை, மீட்பு படை மற்றும் தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோரை மீட்டனர். சில இடங்களில் வீட்டின் மேற்பகுதி வரை வெள்ளம் உயர்ந்து காணப்பட்டது. புயலால், பல இடங்களில் தொலைதொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டன.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *