( நூரளை பி. எஸ். மணியம்)
டென்மார்க் ஸ்ரீ அபிராமி உபாசகி அன்னையின் மலையக விஜயத்தை முன்னிட்டு நுவரெலியா இந்து கலாசார பேரவையின் ஏற்பாட்டில் நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை அன்னையின் கூட்டு பிரார்த்தனை யும் பஜனையும் ஆசீர்வாதமும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தெரிவு செய்யப் பட்ட நுவரெலியா, மாகாஸ்தோட்ட மற்றும் பம்பரக்கலை ஆகிய இடங்களில் இயங்கும் அறநெறி பாடசாலையைச் சேர்ந்த 265 மாணவர்களுக்கான உலர் உணவு பொதிகளும் 250 பெற்றோர்களுக்கு உடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.


அத்தோடு 600 பேருக்கு பகல் உணவும் வழங்கப்பட்டது. இந்த செயற்பாட்டை நுவரெலியாவில் நடத்துவதற்கு நுவரெலியா இந்து கலாசார பேரவையின் உப தலைவரும் ஊடகவியலாளருமான எஸ். தியாகு மேற்கொண்டிருந்தார்.



இவ் வைபவத்தில் டென்மார்க் ஸ்ரீ அபிராமி உபசாகி அன்னையும் நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் நுவரெலியா இந்து கலாசார பேரவையின் தலைவர் ரெங்கன் பாலகிருஷ்ணன், செயலாளர் எம். பெரியசாமி உட்பட பெருந்திரளானோர் கலந்துக்கொண்டனர்.
இந்த வேலைத்திட்டம் மலையகத்தில் மாத்திரமல்ல யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதும் குறிப்பிடதக்கது.