அரசாங்கத்தின் வரி கொள்கையை உடனடியாக மாற்றுமாறு கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படட பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறைவு செய்வதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட மின்சார சபை ஊழியர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், பெட்ரோலியம், நீர் வழங்கல், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவையாளர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்கள் நேற்றைய(15) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றிருந்தன.

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறும் அனைவரிடமிருந்தும் 06 வீதம் முதல் 36 வீதம் வரை வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால், தாம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனினும், தமது கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ள காரணத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பினை இன்று(16) காலை 8.00 மணிக்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து நேற்று(15) முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை இன்று (16) காலை 6.30 உடன் தற்காலிகமாக நிறைவுக்கு கொண்டு வந்தாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை இன்று(16) காலை 7 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுக சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று(15) நள்ளிரவு முதல் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்ததாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இன்று (16) காலை 8 மணி முதல் வங்கி ஊழியர்கள் வழமை போன்று தமது கடமைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்களின் சங்கம் கூறியுள்ளது.

தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று(15) நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

ரயில் ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமும் நேற்று(15) நள்ளிரவுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக லொகோமொடிவ் ரயில் பொறியியலாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (16) பிற்பகல் கூடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *