பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சுவாசத்தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
86 வயதான பரிசுத்த பாப்பரசருக்கு கடந்த சில தினங்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்ததாக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பரிசுத்த பாப்பரசருக்கு கொவிட் தொற்று இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசுத்த பாப்பரசரை சில நாட்களுக்கு வைத்தியசாலையில் வைத்திருந்து முறையான சிகிச்சைகளும் பயிற்சிகளும் வழங்க வேண்டியுள்ளதாக வத்திக்கான் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருத்தோலை ஞாயிறு தினத்திலிருந்து பரிசுத்த வாரம், உயிர்த்த ஞாயிறு வரை திருப்பலிகள் மற்றும் வழிபாடுகளை பரிசுத்த பாப்பரசர் தலைமை தாங்கி ஒப்புக்கொடுப்பதற்கு ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஏப்ரல் மாத இறுதியில் ஹங்கேரிக்கு விஜயம் மேற்கொள்வதற்கும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திட்டமிட்டிருந்தார்.