துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. இன்னும் பல கட்டிட இடிபாடுகள் அகற்றப்படாத நிலையில், பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் தாண்டும் என ஐநா கணித்துள்ளது.

துருக்கி, சிரியா எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த 6 ஆம் திகதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் பல ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் இடிந்து மண்ணில் புதைந்தன.

இதனால் மக்கள் கொத்து கொத்தாக இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை 3,500 ஆக இருந்த போது, இதை விட மொத்த பலி எண்ணிக்கை 8 மடங்கு அதிகமாக, அதாவது 30 ஆயிரமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்தது.

ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்டு கடந்த 6 நாட்களாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், நேற்று பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியது. துருக்கியில் 29,605 பேரும், சிரியாவில் 3,574 பேரும் பலியாகி உள்ளனர். இரவு பகலாக மீட்புப்பணிகள் நடந்து வரும் போதிலும், இரு நாடுகளிலும் இன்னும் பல இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்படவில்லை. இதனால், இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும், 6 நாட்களைத் தாண்டுவதால் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு சிலர் மட்டுமே 150 மணி நேரத்தையும் தாண்டி அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே ஐநாவின் மீட்புப்பிரிவு தலைவர் மார்டின் கிரிபித் அளித்த பேட்டியில், ‘‘நிலநடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கையை கணிப்பது மிகவும் கடினமானது. ஆனால், நிச்சயம் இப்போதைய நிலையை விட 2 மடங்கு (50 ஆயிரம்) அல்லது அதற்கும் மேலான மக்கள் இறந்திருக்க வாய்ப்புண்டு’’ என்றார்.

131 கட்டிட ஒப்பந்ததாரர்கள் கைதுநிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இடிந்து விழுந்ததற்கு அதன் மோசமான கட்டுமானம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், விதிமுறைகளை பின்பற்றாமல் பலவீனமான கட்டிடங்களை கட்டிய 131 கட்டிட ஒப்பந்ததாரர்களை துருக்கி அரசு நேற்று கைது செய்தது.நிலநடுக்கத்தால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *