பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் ஷகாப் கேல் பகுதியை சேர்ந்தவர் பக்ஷீஷ். இவரது மனைவி மிஸ்மா. இந்த தம்பதிக்கு கான் ஜயீப் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கடந்த வெள்ளி கிழமை திடீரென தனது மனைவி மிஸ்மாவிடம் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் தகராறு முற்றியதில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மிஸ்மாவை நோக்கி சுட்டு உள்ளார்.

இதனை பார்த்த மகன் ஜயீப் அதிர்ந்து போயுள்ளார். எனினும், படுகாயமடைந்த நிலையிலும், மிஸ்மா பக்கத்து அறைக்கு ஓடி சென்று மற்றொரு துப்பாக்கியை எடுத்து வந்து கணவரை சுட்டு உள்ளார். இதில் பக்ஷீஷ் உயிரிழந்து விட்டார். தாயார் மிஸ்மாவை ஜயீப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். எனினும், படுகாயமடைந்த மிஸ்மா அதில் பலனின்றி உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து உள்ளனர். ஒருவரை ஒருவர் சுட்டு கொண்டதில் மரணங்கள் நடந்து உள்ளன என வழக்கு பதிவு செய்து உள்ளனர். எனினும், தனது தாயாரை சுட்ட அதிர்ச்சியில், பழி வாங்க தனது தந்தையை ஜயீப் சுட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை, ஆயுத பயன்பாடு பற்றிய தடயவியல் அறிக்கை ஆகியவற்றை எதிர்நோக்கி உள்ளனர். பெஷாவர் நகரில் சமீப காலங்களாக கொள்ளை, மொபைல் போன் பறிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. கடந்த ஜனவரியில் பெஷாவரில் மசூதி மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் போலீஸ் உயரதிகாரிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோக சம்பவமும் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *