பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்கு சாதகமான கடினமான தீர்மானங்களை எடுப்பார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

வரி விதிப்பு செய்யப்பட்டது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அறியாமல் அல்ல என்றும் நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு நடத்தும் நோக்கிலேயே அத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதேபோல வெகு விரைவில் நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் முதன்முறையாக பொருத்தப்பட்ட Hyundai Grand i10 மோட்டார் வாகனத்தை சந்தையில் அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (10) கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் வெகு விரைவில் மீண்டு விடும் என்ற நம்பிக்கை இத்தகைய முதலீடுகளால் உறுதி செய்யப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் Hyundai Grand i10 வாகனத்தை சந்தைப்படுத்துவதன் மூலம் வெளிநாடுகள் எமது நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கை மென்மேலும் உறுதி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையிலுள்ள அபான்ஸ் ஒட்டோ நிறுவனம் மற்றும் கொரியாவின் ஹூன்டாய் மோட்டார் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மோட்டார் வாகனம் சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்சாலையொன்றில் பொருத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் வாகனங்களை பொருத்துதல் மற்றும் வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்தல் ஆகிய துறையில் இந்நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *