பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிலிப்பைன்ஸின் தெற்கில் பசிலன் (Basilan) எனும் பகுதியில் 250 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் நள்ளிரவில் தீ பரவியுள்ளது.
இதன்போது, கப்பலில் இருந்த பயணிகள் பலர் நீரில் குதித்துள்ளனர். கடலோர காவல் படையினரும் மீனவர்களும் இணைந்து அவர்களை மீட்டுள்ளனர்.
எனினும், 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேரை காணவில்லை. காயமடைந்த 23 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு துறைமுக நகரமான ஜாம்போங்காவில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ நகரத்திற்கு MV Lady Mary Joy 3 எனும் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் பசிலன் பகுதியில் தீப்பிடித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
எரிந்த கப்பல் பசிலன் கடற்கரை பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்த 31 பேரில் 18 பேரின் சடலங்கள் கப்பலின் ஓய்வு அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
33 ஆண்டுகள் பழமையான குறித்த கப்பலின் தரம் தொடர்பிலும், பட்டியலிடப்படாத பயணிகள் எவரும் கப்பலில் பயணித்தார்களா என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமற்போன 7 பயணிகள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.