ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அங்கு பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 75 சதவீத பெண் பத்திரிக்கையாளர்கள் தங்கள் வேலையை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ‘டோலோ நியூஸ்’ என்ற செய்தி ஊடகத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஊடகவியலாளர் சோனியா நியாஸி தொகுத்து வழங்கினார்.

இதில் பங்கேற்று பேசிய செய்தியாளர் அஸ்மா கோக்யானி, இஸ்லாம் மதத்தின் பார்வையில் பெண்கள் கல்வி பெறுவதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் அனைத்து உரிமைகளும் உள்ளன என்று தெரிவித்தார். முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர் ஸாகிரா நபில் பேசிய போது, “நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த சமூகத்தில் பெண்கள் இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணால் பள்ளியில் கல்வி கற்க முடியாவிட்டால், அவள் வீட்டிலேயே கல்வி கற்றுக்கொள்வாள்” என்று கூறினார். சுமார் 50 நிமிடங்களில் ஒளிபரப்பான இந்த விவாத நிகழ்ச்சியில், பெண்களுக்கான உரிமைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ‘டோலோ நியூஸ்’ செய்தி ஊடகத்திற்கு சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *