“பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை பெற்றுக்கொடுத்தல் எனும் அடிப்படையில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.” என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

கடந்த வாரம் பெருந்தோட்டத்துறை அமைச்சர் கௌரவ ரமேஷ் பத்திரன மற்றும் ராஜாங்க அமைச்சர் கௌரவ லொஹான் ரத்வத்தவுடன் பெருந்தோட்ட அமைச்சில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. இக்கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலு சாமி ராதாகிருஷ்ணனும் பங்கேற்றிருந்தார்.

இதன் போது மலையக பெருந்தோட்ட மக்களின் காணியுரிமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதன் போது பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை பெற்றுக்கொடுத்தல் எனும் அடிப்படையில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பெருந்தோட்டங்களில் வாழுகின்ற மக்களுக்கு காணி உரிமையுடன் தனி வீடுகளை அமைப்பதற்கான பல முயற்சிகள் இதற்க்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அவை ஒரு முழுமையான தீர்வை பெற்றுக்கொடுத்ததாக இல்லை. இதற்க்கு முன் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள் பல குறைப்பாடுகளுடனே காணப்படுகின்றது. குறிப்பாக தோட்டங்களில் வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கான காணி வழங்கல் என்பதே பிரதானமானதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே பெருந்தோட்டங்களில் வாழுகின்ற தற்போது தோட்டங்களில் வேலை செய்யாதவர்களுக்கு காணி உரித்தை பெற முடியாது போயுள்ளது. தற்போது பெருந்தோட்டங்களில் வாழுகின்ற குடும்பங்களில் ஒரு சிறு எண்ணிக்கையானவர்களே தோட்ட தொழிலாளர்களாக உள்ளனர். பெருமளவானவர்கள் தோட்ட தொழிலாளர்களாக இல்லை. இச் சூழலில் வேலை செய்யும் தொழிலாளருக்கான மற்றும் தொழில் செய்யாதவருக்கான எனும் அடிப்படையில் மீண்டும் ஒரு அமைச்சரவை பத்திரம் முன்வைப்பதில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எனவே பெருந்தோட்டத்தில் வாழுகின்ற சகல குடும்பங்களுக்கும் காணி உரிமையை பெறக்கூடிய வகையில் பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை வழங்கள் என அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட வேண்டும் என விளக்கமளித்தோம். அதனை அமைச்சர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளும் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். அதற்கமைய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

அத்தோடு தற்போது காணப்படுகின்ற தனி வீடுகளுக்கு அவர்களிடம் உள்ள நிலத்தை அளவை செய்து அதற்கேற்ப காணி உறுதி வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது. மேலும் கடந்த காலத்தில் வழங்கிய ஏழு பெர்ச் என்பதையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பெருந்தோட்ட்டத்தில் குடியிருப்பவர்களுக்கு முழுமையான காணி வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழல் வெகு விரைவிலேயே உருவாகும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. என்று கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *