உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின. அதேவேளையில் இந்த போரில் ரஷியாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷியா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர் முனைக்கு அனுப்பிவருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உக்ரைன் போரில் பங்கேற்ற சுமார் 3 லட்சம் வீரர்களை அணிதிரட்ட புதின் உத்தரவு பிறப்பித்தார். அதை தொடர்ந்து போரில் பங்கேற்க விரும்பாத ரஷிய ஆண்கள் கூட்டம், கூட்டமாக அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடினர். மேலும் இந்த உத்தரவுக்கு எதிராக ரஷியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
போலீசார் நூற்றுக்கணக்கானோரை கைது செய்து போராட்டங்களை கலைத்தனர். அந்த வகையில் உக்ரைன் போரில் பங்கேற்க மறுத்த 24 வயதான ரஷிய ராணுவ வீரர் மார்செல் காண்டரோவ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கியது. மார்செல் காண்டரோவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.