(நூரளை பி. எஸ். மணியம்)
மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் நகர, கிராம பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் இணைப்புகள் குறித்து, நீர்வழங்கல், வடிகாலமைப்பில் உள்ள குறைப்பாடுகள் சம்பந்தமாகவும், சுகாதார பாதுகாப்பான நீரை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை பற்றியும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.
இதற்கான தீர்வு பொறிமுறையை தயாரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி பேசப்பட்டு, தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே. இடையிலான கலந்துரையாடலொன்று கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி நீர்வழங்கல் குறித்து ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது உள்ளுராட்சிசபைகளின் அதிகாரம், ஆளுநர் வசம் இருப்பதால், கண்டி, நுவரெலியாவில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் துறைசார் அதிகாரிகளிடம் இது பற்றி பேச்சு நடத்தி, மக்களுக்கு தடையின்றி நீரை வழங்குவதற்கும் இங்கு தீர்மானம் எட்டப்பட்டது.
இதன்போது, மத்திய மாகாண தமிழ்க் கல்வி பிரிவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என்று ஆளுநர் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். மேலும், இதற்கான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய மாகாணத்தில் தமிழ்க் கல்வி பிரிவில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் சந்திப்பில் எடுத்துரைக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள விசேட சந்திப்பின்போது இப்பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் வருண சமரதிவாகர, நீர்வழங்கல் அதிகாரசபை நிஷாந்த ரணதுங்க, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, புதிய கிராமங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் ரூபதரஷ்ன், நீர்வழங்கல் சபையின் பொது முகாமையாளர் உள்ளிட்டோர் சந்திப்பில் பங்கேற்றனனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *