தென்னிந்திய திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக வலம் வந்தவர் ஜூடோ ரத்தினம். 92 வயதான ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேல் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ள ஜூடோ ரத்தினம், 2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
மறைந்த சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினத்தின் உடல், அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. வயது மூப்பு காரணமாக காலமான ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு, அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு ஜூடோ ரத்தினத்தின் உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.