தலைசிறந்த அரசியல்வாதியும், இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரவை அமைச்சருமான, மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இன்று, அவரது பூதவுடல் தாங்கிய விஷேட வாகனம், பொலிஸ் வாகன தொடரணியுடன் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் அருகே பூதவுடல் கொண்டு வரப்பட்ட பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செங்கம்பளத்தின் ஊடாக பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்னால் உள்ள மண்டபத்தில் அமைந்துள்ள விசேட வைபவ மண்டபத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் மலர்வலயங்களை வைத்து அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், முன்னாள் சபாநாயகர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற பொதுச் செயலாளர் படைக்களசேவிதர் , தூதுவர்கள் உட்பட பாராளுமன்றத்தின் அனைத்து ஊழியர்களும் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

1941 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த ஜோசப் மைக்கேல் பெரேரா, 2001 டிசம்பர் 19 முதல் 2004 பெப்ரவரி 07 வரை இலங்கை பாராளுமன்றத்தின் 17 ஆவது சபாநாயகராகப் பணியாற்றினார்.

1967-1970 காலகட்டத்தில் ஜா-எல நகர சபையின் உப தவிசாளராகவும் 1970-1971 இல் ஜா-எல நகர சபையின் தவிசாளராகவும் பணியாற்றினார்.

1971 முதல் 1976 வரை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாகவும் 1978-1988 வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

மறைந்த ஜோசப் மைக்கல் பெரேரா, 1989 முதல் 2015 வரை உள்நாட்டலுவல்கள் அமைச்சர், தொழிலாளர் அமைச்சர், மீன்பிடி அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *