இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பேச்லட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி சந்தித்துள்ளார். இதன்போது கூட்டணி சார்பாக நுவரெலியா மாவட்ட எம்பி உதயகுமார் மற்றும் பிரான்சிய தூதரகம் சார்பாக நயன கணேசன் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர்.
பிரான்சிய தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு பற்றி மனோ கணேசன் எம்பி கூறியதாவது,
இலங்கை அரசியல் பரப்பில் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்கள் தொடர்பில் அறிவதில் தற்போது சர்வதேச சமூகம் பெரிதும் காட்ட தொடங்கி இருக்கும் விசேட அக்கறையை நாம் மீண்டும், மீண்டும் கோரிக்கைகளை விடுத்து உருவாக்கியுள்ளோம்.
இதன் வெளிப்பாடாகவே பிரான்சிய தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பேச்லட் உடனான இந்த நட்புரீதியான சந்திப்பு நடைபெற்றது. மிகவும் அக்கறையுடன் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அரசியல், சமூக, பொருளாதார சவால்கள் தொடர்பில் தூதுவர் பிரான்கொயிஸ் கேட்டு அறிந்துக்கொண்டார்.
இனிமேல் பிரான்சிய குடியரசின் இலங்கை தொடர்பான கொள்கையில் இங்கு வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களுக்கும் உரிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான ஒரு நாடான பிரான்ஸ், இலங்கையின் இன்றைய கடன் சீரமைப்பு முயற்சிகளுக்கு எந்தளவு ஒத்துழைப்பு வழங்குகிறது என்பது பற்றியும், தூதுவர் பிரான்கொயிஸ் எமக்கு விளக்கி கூறினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தொகுத்துள்ள மலையக மக்களின் அரசியல் அபிலாசை ஆவணத்தில் இடம்பெற்றுள்ள “நிலவரம்பற்ற சமூக சபை” தொடர்பில் பிரான்ஸ் நாட்டின், அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் நமக்கிடையே மேலும் உரையாடல்களை முன்னெடுக்கவும் தூதுவர் பிரான்கொயிஸ் தனது அக்கறையையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.