இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனால் மலையகதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் செயலணியின் கல்வி அபிவிருத்தி உறுப்பினருமான கணபதி கனகராஜ்  தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவது தொடர்பாகவும், அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்று இருப்பது தொடர்பாகவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து  வருகின்றனர்.

மலையக மக்கள் இலங்கையில் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு ஒதுக்கப்பட்ட இனமாக இருந்த நிலையை மாற்றி அமைத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சாணக்கியமான அணுகுமுறையினாலாகும்.

காலத்துக்கு காலம் இருக்கின்ற அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனால் பறிக்கப்பட்ட பிரஜா உரிமை மீட்டெடுக்க முடிந்தது. எல்லோருக்கும் இலவச கல்வி என்ற நிலை இருந்தபோது அது மலையக மாணவர்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டது. மலையகத் தோட்ட பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்துவதற்கும், சீடா செயல் திட்டம் ஜிடிசெட் ஆகியவற்றின் நிதி உதவியோடு பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும்

அப்போதைய அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்டதுதான் காரணமாகும். இதே போல  ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரி, தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் என்பவற்றுடன்  தோட்ட பாடசாலைகளுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளும்  மலையகத்துக்கு வந்து கிடைத்தன.

கல்வித் துறை மட்டுமல்லாமல் இலங்கை போலீஸ் சேவையிலும், சமூர்த்தி உத்தியோகத்தற்களாக கிராம உத்தியோகத்தர்களாகவும்  பல்வேறு அரச துறைகளில் மலையகத் தமிழர்கள் உள் நுழைவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக் கொண்ட அமைச்சு பதவிகலே காரணமாக இருந்தன.

நாட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் கொதித்தெழுந்தபோது மக்களின் உணர்வுகளை மதித்து எமது பொது செயலாளர்  ஜீவன் தொண்டைமான் தான் வகித்த ராஜாங்க பதவியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் எமது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எதிர்க்கட்சிகள் கூட அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய அமைச்சுப் பொறுப்பை ஜீவன் பொறுப்பேற்க வேண்டும். என்ற கருத்தை முன் வைத்திருந்தன.

தற்போது அமைச்சராக ஜீவன் தொண்டமான் பொறுப்பேற்றவுடன் இந்திய வீடமைப்பு திட்டத்தை தொடர்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல தேங்கி கிடந்த பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து இருக்கின்றன.

மலையக பல்கலைக்கழகம் தொடர்பான முன்னெடுப்புகள் தற்போது மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடுகள் அனைத்தும் காங்கிரஸின்  உயர்மட்ட குழுவில்  ஆராய்ந்து கொள்கை ரீதியாக மலையக மக்களின் நலன் கருதி  எடுக்கப்பட்ட முடிவுகளாகும்.  அரசாங்கங்களோடு இணைந்து செயல்படுவது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானையோ  அல்லது தொண்டமான் குடும்பத்தினரையோ  வசை பாடுவதை விடுத்து  இதன் மூலம் மலையக மக்களுக்கு கிடைத்த நன்மைகளை சீர்தூக்கி பார்த்து விட்டு எவராவது விமர்சனங்களை வைப்பார்களேயானால் இதற்கு முகம் கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தயாராக இருக்கிறது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *