நுவரெலியா எஸ்.தியாகு

மாத்தளை மாநகர சபை தகனசாலையில் ஆறு மாத காலப்பகுதியில் 550இ000 ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை  கணக்காய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பற்றுச் சீட்டுகள் திருத்தம் செய்யப்பட்டே இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதை கண்ணகாய்வை மேற்கொண்ட குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

பொதுமக்கள்  தகனசாலை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு செலுத்தப்படுகின்ற நிதிக்காக வழங்கப்படுகின்ற பற்றுச்சீட்டுகளின்  தொகையை மாற்றியே நிதிமோசடிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த வருடம் 2022 ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் இந்த வருடம் 2023  ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிவரை ஆறு மாத காலத்தில் தகனசாலையில் தகனம் செய்யப்பட்ட சடலங்களுக்கு பொது மக்களால் செலுத்தப்பட்ட நிதி தொடர்பான ஆய்விலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாத்தளை மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு 20இ000 ரூபாவும் வெளியாருக்கு 25இ000 ரூபாவும் மாநகர சபையால் குறிப்பிட்ட தகனம் செய்வதற்கான தொகை அறவிடப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுக்கான பற்றுச்சீட்டுகளை கணக்காய்வு குழுவினரால் ஆய்விற்கு உட்படுத்திய போது வெளியாரிடம் பெற்றுக் கொண்ட 25இ000 ரூபாவிற்கு பதிலாக அதனை திருத்தி 20இ000 ரூபா என மாநகர சபையின் கணக்கில் காட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் வங்கி விடுமுறை தினம் மற்றும் பொது விடுமுறை தினமான கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி  தற்காலிகமாக இரண்டு பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டு 50இ000 ரூபா தகனசாலை பொறுப்பாளரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மறுநாள் காலை மாநகர சபைக்கு செலுத்தப்பட்ட தொகையையும் பற்றுச்சீட்டையும்; பரீட்சித்து பார்த்த பொழுது 50இ000 ரூபா என குறிப்பிடப்பட்டிருந்த பற்றுச் சீட்டில் 35இ000 ரூபா என திருத்தப்பட்டிருந்தமை கணக்காய்வின்  ஊடாக தெரியவந்துள்ளது.

மாத்தளை மாநகர சபை தகனசாலைக்கு கொண்டுவரப்படுகின்ற சில சடலங்கள் தகனம் என்பதற்கு பதிலாக அடக்கம் செய்யப்பட்டதாக பற்றுச்சீட்டு உடைக்கப்பட்டு நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையை கணக்காய்வு குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தகனசாலைக்கு கிடைக்கின்ற வருமானம் தொடர்பில் சேவைகளை முன்னெடுத்த நபர் மீதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறித்த நபர் தற்பொழுது மாவட்ட வைத்திய சேவை காரியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளமை  தெரியவந்துள்ளது.

இந்த நிதி மோசடி தொடர்பாக மாத்தளை மாநகர சபையினரால் மாத்தளை பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக அந்த பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சுமேத தலைமையிலான குழவினர் விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

மாத்தளை மாநகர சபையால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளில்  ஒரு நபரின் செயற்பாட்டை இன்னும் ஒருவர் ஊடாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்ற செயற்பாடானது  முறையாக செயற்படுத்தப்படவில்லை என்ற விடயத்தையும் கணக்காய்வை  மேற்கொண்ட குழவினர் அறிக்கை  ஒன்றின்  ஊடாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நபரிடம் தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி இது தொடர்பான மேலதிக தகவல்கள் அவர் தரப்பில் கேட்கப்பட்ட பொழுது அவர் தனக்கு இது தொடர்பாக எந்த ஒரு விடயமும் தெரியாது எனவும் எந்த ஒரு தரப்பினரும் தனக்கு இந்த சம்பவம் தொடர்பில் அறிவித்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக மாத்தளை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளமை தொடர்பில் மாநகர சபையின் ஆணையாளர் யுரேஸ்  நிசாந்த மாதுவகே  உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு மாத்தளை மாநகர சபையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளக விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன .இது தவிர கடந்த சில வருடங்களாக இடம்பெற்ற நிதி தொடர்பான   விடயங்களையும் ஆய்விற்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என்பதை ஆணையாளர் யுரேஸ்  நிசாந்த மாதுவகே  தொலைபேசி ஊடாக எமக்கு தெளிவுபடுத்தினார்.மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான மோசடிகள்   நடைபெறுவதை தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும்  ஆணையளார் குறிப்பிடுகின்றார்.

கணக்காய்வாளர்  பி.ஜி.எஸ்.நிசாந்த  தலைமையிலான குழவினரே மேற்படி கணக்காய்வை மேற்கொண்டுள்ளனர்.இந்த அறிக்கையின் பிரதிகள் மத்திய மாகாண ஆணையாளர் மத்திய மாகாண பிரதி அணையாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ளுராட்சி மன்றங்கள் மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு சேவை வழங்குகின்ற நிறுவனமாக உள்ளன . இந்த உள்ளுராட்சி நிறுவனங்கள் தமது பணிக்கூற்றிலும் மக்களுக்கு சிறப்பான சேவையை முன்னெடுப்பதே தமது இலக்கு என்பதை தெளிவாக குறிப்பிட்டிருந்தாலும் அதையும் மீறி இங்கு சில மோசடிகளும் ஊழல்களும் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் கடும் கண்டனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *