பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பகுதிகளில் நண்பகல் முதல் அங்குள்ள பொது நிறுவனங்கள், கடைகள் முற்றாக மூடப்பட்டு வெள்ளக்கொடி பறக்க விடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மறைவு எமது பிராந்தியத்திற்கு பாரிய இழப்பாகுமென சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தலைவர் எம்.எம்.முபாரக் தெரிவித்துள்ளார்.

இன்று (26) அதிகாலை மரணமடைந்த அவர் மரணிக்கும் போது 71 வயதாகும்.

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா அவர்களின் ஜனாஸா தற்போது கொழும்பு கிருலப்பனையிலுள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று இஷாத்தொழுகையின் பின்னர் தெஹிவளை ஜும்மா பெரிய பள்ளிவாயலில் தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுமென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் முன்னணி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையமான Myown Group நிறுவனத்தின் இஸ்தாபகத்தலைவரும், தொழிலதிபருமான மீராமொஹிடீன் முஹம்மட் முஸ்தபா
1952 ஜூலை 28ம் திகதி பிறந்தார்.

ஒரு கணக்காளரான இவர், 1994 – 1999 காலப் பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக அரசியலுக்குள் பிரவேசித்தார். அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார்.

2001 – 2004 மற்றும் 2004 – 2010 காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், 2007 – 2010 காலப்பகுதியில் உயர்கல்விப் பிரதியமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் ஒரு சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கினார்.

MYOWN Computer எனும் கல்வி நிறுவனத்தை நடாத்தி வந்த இவர், அம்பாறை மாவட்டத்தின் கல்வி, சமூக, சமய விடயங்களில் மக்களுக்கு பாரிய சேவைகளை மேற்கொண்டிருந்தார்.

பெயர் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய பல அபிவிருத்திகளை அம்பாறை மாவட்டத்தில் செய்த இவர், கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது தனது செல்வத்திலிருந்து மக்களுக்காக வாரி வழங்கிய கொடைவள்ளலாவார்.

தெரிந்தும் தெரியாமலும் மக்களுக்காக பல உதவிகளைச்செய்த இவர், மறைந்தாலும் என்றும் அனைவரது உள்ளங்களிலும் வாழப்போகும் ஓர் முன்னுதார மனிதராவார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான இவர், அண்மையில் நாடு பூராகவும் கட்சிப்புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், சம்மாந்துறை, கல்முனைத் தொகுதியிலும் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையில் பிராந்தியத்தில் கட்சியைப் பலப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சிக்கான ஆதரவு கோரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 1999ம் ஆண்டுகளில் தனியொரு மனிதனாக நாட்டின் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து இணைந்து அம்பாரை கரையோரப் பிரதேசமெங்கும் பாரிய பங்களிப்பை வழங்கி ஐக்கிய தேசிய கட்சிக்கு எழுச்சியை உருவாக்கியவர் மயோன் முஸ்தபா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *