யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று (28) மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரையிலான ஒரு மணி நேரம் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி (ETF) நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, இத்தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த முனைவதன் மூலம் EPF/ETF நிதியங்களில் கணக்குகளைக் கொண்டுள்ள சுமார் 25 இலட்சம் உழைக்கும் வர்க்க அங்கத்தவர்களின் ஒரேயொரு ஓய்வூதியச் சேமிப்பினை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த அரசாங்கம் முயல்கின்றது.

பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையின்படி இந்த உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் EPF/ETF கணக்குகளின் மீது சுமத்தப்படும் போது அனைத்து ஊழியர்களினதும் (EPF/ETF அங்கத்தவர்களினதும்) சேமிப்புக்களில் இருந்தும் அரைவாசித்தொகை (50%) எதிர்வரும் 16 வருட காலப்பகுதியில் இல்லாமற் போகும் அபாயம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அரச ஊழியரின் ஓய்வூதிய நிதியையும் இவ்வாறு கையாள அரசாங்கம் முற்படுகின்றது. இதன் மூலம் EPF/ETF அங்கத்தவர்களுக்கு நிதிரீதியான உடனடிப்பாதிப்பும் நீண்டகாலத்தில் முழுமையாக இவ்விரு நிதிகளும் கிடைக்கபெறாத அபாய நிலையும் உள்ளது என போராட்டகாரர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம், வடமாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம், வடமாகாண கால்நடை போதானாசிரியர் சங்கம், ஶ்ரீ லங்கா தபால் தொலைதொடர்பு சேவை உத்தியோகத்தர் சங்கம், வடமாகாண அரச சாரதிகள் சங்கம், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கம் ஆகிய 9 தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தன.

நன்றி தினகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *