வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளும் நிச்சயம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,  குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், அமைச்சர் ஜீவன் தொண்டமானை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

கொழும்புவில் உள்ள அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது,  வடக்கு மாகாணத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள கிராமங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

வடக்கின் தற்போதைய நிலைவரம் பற்றியும் அவர் அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், விரைவில் வடக்கு பகுதிக்கு நேரில் வருவதாகவும், மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோது வடக்குக்கு ஆற்றிய சேவைகளை இதன்போது நினைவுகூர்ந்த அங்கஜன், ஜீவன் தொண்டமானும் சிறப்பாக செயற்படுகிறார் என நேரில் பாராட்டு தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *