“மலையக மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே, நெருக்கடியான காலகட்டத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றேன். தற்போது கூட மலையக மக்களின் குரலாகவே அமைச்சரவையில் செயற்பட்டு வருகின்றேன். ” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
” மலையகத்தில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தவே, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் பங்கேற்றேன். இதனை சிலர் விமர்சிக்கலாம். ஆனால் மக்களுக்காகவே என்பது அரசியல் பயணம் என்பதால் மக்கள் பக்கம் நின்றே முடிவுகளை எடுப்பேன்.” எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறினார்.
பண்டாரவளை ஐஸ்லபி தோட்டத்தில் இ.தொ.காவின் உப தலைவரும், ஹல்துமுல்ல பிரதேச சபையின் தவிசாளருமான அசோக்குமாரின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு இன்று (17) குறித்த தோட்டத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் எதற்காக அமைச்சு பதவியை பொறுப்பேற்றேன் என சிலர் விமர்சன கோணத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எனவே, அது தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். இது விடயத்தில் வரலாறு என்பது மிக முக்கியமாகும்.
எமக்கு 30 ஆண்டுகள் வரை குடியுரிமை இருக்கவில்லை. அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டிருந்தோம். வீடமைப்பு திட்டம் கிடைக்கவில்லை.
கல்வி, சுகாதாரம் உட்பட சட்டரீதியாக கிடைக்கவேண்டிய உரிமைகள்கூட தாமதாமாகவே கிடைத்தன. இதனால் எமது சமூகம் இழந்தவை ஏராளம். எனவே, இனியும் இழுத்தடிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் இடமளிக்கமுடியாது. அதற்கு அமைச்சரவையில் மலையக பிரதிநிதித்துவம் அவசியம். அப்போதுதான் மக்களின் சார்பில் குரல் எழுப்பவும், அமைச்சரவைப் பத்திரங்களை முன்வைக்கவும் முடியும்.
வடக்கு, கிழக்குக்கு 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வந்தபோது, அமரர்.ஆறுமுகன் தொண்டமான் அமைச்சரவையில் இருந்ததால் தான் இந்திய அரசுடன் பேச்சு நடத்தி 4 ஆயிரம் வீடுகள் பெற முடிந்தது. இப்படி எமது மக்களுக்காக பல விடயங்களை அமைச்சராக அவர் சாதித்து காட்டியுள்ளார்.
நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர், 20 லட்சம் குடும்பங்களுக்கு உதவித்திட்டம் வழங்கும் யோசனை வந்தது. அப்போது மலையக மக்களையும் உள்வாங்குமாறு பரிந்துரைத்தேன். அந்த யோசனை ஏற்கப்பட்டது. இவ்வாறு எமது மக்களின் குரலாக அமைச்சரவையில் செயற்படவே நான் பதவியேற்றேன். தற்போதைய சூழ்நிலையில் அமைச்சரவையில் மலையக பிரதிநிதித்துவம் அவசியம்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரத்துடன் மேடை ஏறியது சம்பந்தமாக (தலைமையக திறப்பு விழா) சிலர் தவறான கோணத்தில் விமர்சித்தனர். வன்முறை அரசியல் கலாச்சாரம் வேண்டாம். புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தவே நான் அவ்வாறு சென்றேன். தோட்டங்களில் எமது மக்களிடையே கட்சி, சங்க பிளவுகள் இருக்ககூடாது. அந்தவகையில் அரசியல் வேறுபாடுகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. நாகரீகமான அரசியலையே நாம் எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.