கனடாவில் 86 வயதுடைய நபரொருவர் எழுந்து நடக்க முடியாத நிலையிலும் 4 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றியதால், இன்று அவரை கனேடிய மக்கள் ஹீரோ என புகழ்ந்து வருகின்றனர்.

குறித்த நபருக்கு இரண்டு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை, இரண்டு முறை இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை, புற்றுநோய், மாரடைப்பு உள்ளது.

ஆனாலும் அவர் குறித்த குழந்தையை பல முயற்சிக்கு பிறகு காப்பாற்றியுள்ளார்.

கனடா – எட்மண்டனில் வாழ்ந்துவரும் 86 வயதான பிரெட் வாசிலிஷின், தனது மோட்டார் சைக்கிள் உதவியுடன் தனது நாயை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, சற்று தொலைவிலிருந்த குளம் ஒன்றை நோக்கி சுமார் 4 வயது சிறுமி நடந்து செல்வதைக் அவர் கவனித்துள்ளார்.

குறித்த குளம் அபாயமானது என்பதை நன்கு அறிந்த பிரெட் எவ்வளவோ சத்தமிட்டும், அந்தச் சிறுமி குளத்தை நோக்கி நடந்துகொண்டே இருந்துள்ளது. கஷ்டப்பட்டு தனது மொபிலிட்டி ஸ்கூட்டரிலிருந்து எழுந்த பிரெட், குளத்தை நோக்கி தன்னாலியன்ற வேகத்தில் நடந்துள்ளார்.

மேலும், அந்த இடம் நடக்க வசதியாக இல்லாததால், கீழே விழுந்து எழுந்த பிரெட், அந்தச் சிறுமியை நெருங்குவதற்குள் சிறுமி குளத்திற்குள் இறங்கியுள்ளார்.

ஆனால், சிறுமிக்கு தண்ணீர் ஆழமாக இருக்கவே அவள் தத்தளிக்கத் துவங்க, அதற்குள் தண்ணீருக்குள் இறங்கிய பிரெட் குழந்தையைப் பிடித்து இழுத்து அவளை கரைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அதற்குள், நாய் குரைக்கும் சத்தத்தையும், அங்கு நடந்த சம்பவத்தை கவனித்த மக்கள் அங்கு விரைந்ததுடன், மருத்துவ உதவிக்குழுவினரையும் அழைத்திருக்கிறார்கள்.

இதெவேளை, வங்கிக்குச் சென்றிருந்த பிரெட்-யின் மனைவி Ruth வீட்டுக்குத் திரும்ப, கணவர் உடல் முழுவதும் சேறாக, நடுங்கியபடி அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதா என்ற எண்ணம்தான் தனக்கு முதலில் வந்தது என்கிறார் Ruth.

பின்னர், தன் கணவர் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்பது தெரிந்ததும், தனக்கு அதில் எந்த ஆச்சரியமும் இல்லை என Ruth கூறியுள்ளார்.

காரணம், அவர் மற்றவர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுபவர் என்றும், யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும், உதவுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்கமாட்டார் என்பது தனக்குத் தெரியும் என்கிறார் Ruth.

Fredஐப் பொருத்தவரை, தான் சரியான நேரத்தில் அந்த குளத்தின் அருகில் இருந்தது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார் அவர்.

தான் சில நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாலும், குழந்தை தண்ணீரில் மூழ்கியிருக்கக்கூடும் என்கிறார் அவர்.

அவரால் காப்பாற்றப்பட்ட அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவளை கண்காணித்து வருவதாகவும், அவளது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *