ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க*க்கும், அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டிற்கும் (Victoria Nuland) இடையிலான கலந்துரையாடல் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாடு எதிர்நோக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதன் போது, இலங்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தமது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், எழுந்துள்ள பிரச்சினைகளுக்கான அவசரத் தீர்வுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என விக்டோரியா நூலாண்ட் சுட்டிக்காட்டினார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது உட்பட அது தொடர்பில் சிறிய கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

அதிகரித்து வரும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டன, அமெரிக்கா அதற்கு தனது முழு ஆதரவையும் வழங்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *