இன்னும் 25 வருடங்களில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து ” அபிவிருத்தியடைந்த நாட்டை” கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு போட்டி எண்ணத்தை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையும் பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் கௌரவிப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு ரோயல் கல்லூரி அதிபர் ஆர்.ஏ. ரத்னாயக்க நினைவுச்சின்னங்களை வழங்கினார்.
றோயல் கல்லூரி பழைய மாணவர் என்ற வகையில் மெருகூட்டப்பட்டே மன உறுதியும் சவால்களை ஏற்றுக்கொள்ளும் வலிமையும் பெற்றதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு தாம் ஜனாதிபதியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட உறுதியுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறான தடைகள் வந்தாலும் இந்த வேலைத்திட்டம் நிறுத்தப்போவதில்லை எனவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான வேலைத்திட்டம் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார மீட்சியை உருவாக்குவதுடன் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பையும் அனைவரும் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,
அரசியல் களத்தில் றோயல் கல்லூரியின் வரலாறு நீண்டு செல்கிறது. கொழும்பு அகடமி நிறுவப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு, பல சிறந்த மாணவர்கள் சட்டசபை உறுப்பினர்களானார்கள். சி. ஏ. லோரன்ஸ் மற்றும் ஜேம்ஸ் டி அல்விஸ் ஆகிய இருவருமே சட்ட சபையில் அதிக அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். நைட் பட்டத்தை பெற்ற முதல் ஆசியரான சேர் ரிச்சர்ட் மோர்கன், செயற்குழு உறுப்பினர், தற்காலிக சட்டமா அதிபர் மற்றும் தற்காலிக பிரதம நீதியரசர் மற்றும் சேர் முத்துக்குமாரசாமி ஆகிய நால்வரும் அப்போது இந்த நாட்டின் அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தினர்.
அத்துடன், இலங்கையர்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது உறுப்பினரான சேர் பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் அவருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த சேர் மார்கஸ் பெர்னாண்டோ ஆகியோர் றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களாவர்.
1915 கிளர்ச்சியின் பின்னரே இலங்கை சுதந்திர நாடாக மாற்ற தீர்மானிக்கப்பட்டது. இப்பாடசாலையின் பழைய மாணவர் ஹென்றி பெட்ரிஸ் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டபோது இலங்கையை சுதந்திர நாடாக மாற்றுவதற்கான போராட்டம் தொடங்கியது. அப்போது பொன்னம்பலம் இராமநாதன் அவர்களும் றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதால் ஹென்றி பேதிரிஸ் அவர்களுக்காக சட்ட சபையில் வாதாடினார்.
அத்துடன், ஈ.டபிள்யூ.பெரேராவும் சேர் ஜேம்ஸ் பீரிஸும் சிங்கள பௌத்த தலைவர்களுக்காக ஆஜராகுவதற்காக இங்கிலாந்து சென்றனர். அவர்கள் றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களாகவும் இருந்தனர், பின்னர் 1915 கிளர்ச்சியின் இலங்கைக்கு சார்பாக இருந்த அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் றோயல் பழைய மாணவர்களாவர். பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவும் இந்த றோயல் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
இன்றுவரை, இந்த றோயல் கல்லூரி இரண்டு ஜனாதிபதிகள் மற்றும் நான்கு பிரதமர்களை நாட்டிற்கு வழங்கியுள்ளது. எந்தவொரு பாடசாலையானாலும் இது ஒரு சிறந்த சாதனையாகும்.
இதைத்தவிர, மாலைத்தீவின் சுல்தானாக இருந்து, மாலைதீவை நவீனமயப்படுத்திய முஹம்மது பரீத் தீதி, இந்த றோயல் கல்லூரியில் சுமார் ஒரு வருடம் கல்வி கற்றுள்ளார். மேலும், மாலைததீவின் முன்னாள் ஜனாதிபதியான மஹ்மூத் அப்துல் கையூம், றோயல் கல்லூரியில் ஓராண்டு அல்லது அதற்கு மேல் படித்துள்ளார். இவர்கள் அனைவரும் இந்த றோயல் கல்லூரியில் இருந்து தங்கள் நாட்டை நவீனமயமாக்கும் திறனை வளர்த்துக் கொண்டனர் என்று நான் நம்புகிறேன்.
மேலும் இந்தக் கல்லூரி மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது. முதன்முதலில் குடியரசின் அரசியலமைப்பு, றோயல் கல்லூரியின் ஒரு பழைய மாணவரான கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வாவால் உருவாக்கப்பட்டது. இரண்டாம் குடியரசின் அரசியலமைப்பு அவரது வகுப்புத் தோழரான ஜே.ஆர். ஜெயவர்தனவால் உருவாக்கப்பட்டது. அந்தக் கடமையை, யாராலும் மாற்ற முடியாத அளவிற்கு ரோயல் கல்லூரி சிறப்பாக நிறைவேற்றியுள்ளது.
மேலும், பிரதமர் தினேஷ் குணவர்தன, அதே போல் மறைந்த அநுர பண்டாரநாயக்க, மலிக் சமரவிக்ரம மற்றும் நானும் இப்பாடசாலையில் பல சாதனைகளை சேர்த்துள்ளோம். அதாவது எங்களில் இருவர் ஜனாதிபதி பதவியையும், சிலர் பிரதமர் பதவியையும் வகித்துள்ளனர். அவர்களில் ஒருவர் சபாநாயகராகவும், இருவர் சபைமுதல்வர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் இருவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்துள்ளனர்.
றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களான நாம் இந்த வெற்றிகளை படைத்துள்ளோம் என்றே கூற வேண்டும். இன்றைய மாணவர்களாக நீங்கள் இன்னும் அதிகமாக சாதிப்பீர்கள் என்று நம்புகிறேன். சாதனைகள் முன்னெடுத்துச் செல்வதற்கானவை அல்ல. அவற்றை முறியடித்து புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும்.
ஒரு நாடாக நாம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் நேரத்தில் நான் இன்று உங்கள் முன்னிலையில் உரையாற்றுகிறேன். கடந்த 400 வருடங்களாக நாட்டில் இப்படியொரு நிலை ஏற்படவில்லை. இன்று நமது பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நான் இங்கு பொதுவான பொருளாதாரப் விடயங்களைப் பற்றி பேசவில்லை. ஆனால் இந்த நிலை உங்கள் அனைவரையும் பாதிக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரத் தடை மற்றும் விவசாயத்திற்கு உரம் கிடைக்காமை, வரி அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்நாட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
நான் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிந்திருந்தது. நான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரதமர் பதவியை பொறுப்பேற்றார். முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டியது நமது கடமையாக இருந்தது. அதற்கிணங்க, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கையை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் தேவையான எந்தவொரு முடிவையும் ஒரு வருடத்திற்குள் எடுப்பதற்கு நான் தீர்மானித்தேன்.
இது கடினமானதொரு பணியாகும். ஆனால் இந்த நாடு வங்குரோத்தடைந்த நாடாக நீடிப்பதை நான் விரும்பவில்லை. இந்த நாட்டு மக்கள் கஷ்டப்படுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நாம் மீண்டும் எழுந்து நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதனால்தான் இந்த அனைத்து முடிவுகளையும் எடுத்தேன். அதற்கு பிரதமரும் எனக்கு ஆதரவளித்தார்.
ஆனால் நான் எடுக்க வேண்டிய சில முடிவுகள் கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அந்த முடிவுகளுக்காக எனக்கு திட்டுவாங்க நேரிடும்.ஆனால் இந்த முடிவுகளை எடுக்காமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
சவால்களை ஏற்றுக்கொள்வதோடு, நாட்டிற்கு எது சரியானது மற்றும் நல்லதை முன்னெடுப்பதற்கு இந்த றோயல் கல்லூரியில் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.
எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், நான் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை யோசித்தேன். அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன , எந்த அளவுக்கு அதிருப்தி ஏற்படும் என்று. எனவே இந்த முடிவை எடுக்க வேண்டுமா என்று நான் சிந்தித்துள்ளேன். ஆனால் நாட்டின் நலனுக்காகவும், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவும் அந்த கடினமான முடிவுகளை நான் எடுக்க வேண்டியிருந்தது.
நாம் வங்குரோத்தான நாடாகவும், பிச்சைக்கார நாடாகவும் இருக்க முடியாது. அதனால் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த ஆண்டுக்குள் நமது நாட்டின் பொருளாதார நிலையில் ஓரளவு முன்னேற்றம் காண்போம் என்று உறுதியளிக்கிறேன்.
நாட்டை வங்குரோதத்தில் தள்ளும் பழைய முறைப்படி அன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய முறையின் கீழ் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தேவையான அடித்தளத்தை நாங்கள் அமைத்துள்ளோம்.
சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை, ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தது. அடுத்த சுவிஸ்டர்லாந்து, இலங்கைதான் என்று கணிக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று ஆப்கானிஸ்தான் மட்டுமே நமக்கு கீழே உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு உகந்த வகையில் நமது நாட்டின் எதிர்காலத் திட்டங்களை தயாரிக்க வேண்டும். அத்துடன் புதிய அரசியலமைப்பை நாம் தயாரிக்கும் போது அது இன்னும் 100 வருடங்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்க வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டியது, நமக்காக அல்ல. இன்னும் 25 வருடங்கள் இங்கு நாம் யாரும் வாழப்போவதில்லை.இந்த எதிர்காலம் உங்களுக்காக கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இங்கு முன்வரிசையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இன்னும் 25 ஆண்டுகளில் 45 வயதைக்கூட நிறைவு செய்திருக்க மாட்டார்கள். பின் இருக்கைகளில் உள்ள சிரேஷ்ட மாணவர்கள் 25 ஆண்டுகளில் 40 வயதை அடைந்திருப்பார்கள். எனவே நீங்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலத்தில் வாழப்போகிறீர்கள். எனவே நாம் எவ்வாறான நாட்டில் வாழப்போகிறோம் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அந்த சவாலை ஏற்று நாட்டின் எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும்.
ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன கூறியது போல், “இந்த நாட்டின் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்”. ஆனால் இன்று உங்களில் பலர் வெளிநாடு செல்லும் எண்ணத்தில் உள்ளனர். நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்கள் எதிர்காலத்தைப் பார்க்கிறார்கள். ஆனால் நீங்கள் றோயல் கல்லூரி மாணவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வெற்றியை அடைய நாம் மீண்டும் போராட வேண்டும். நமது மதிப்பைப் பாதுகாக்க நாம் தனியாகவும் குழுவாகவும் போராட வேண்டும். அதனால் உங்களில் சிலர் கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். மற்றொரு குழுவினர் இங்கு தங்கிவிடுவீர்கள். ஆனால் உங்களை முழுமையான மனிதனாக மாற்றியது றோயல் கல்லூரி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நான் றோயல் கல்லூரியில் படித்தேன். மேலும், உயர்கல்விக்காக வெளிநாடு செல்லவும் என்னால் முடிந்தது. அதைத்தான் என் அப்பாவும் விரும்பினார். ஆனால் நான் என் நாட்டை மதிப்பதால் இந்த நாட்டில் இருக்க முடிவு செய்தேன்.
அதனால் பாடசாலையை விட்டு வெளியேறியபின்னர் வெளிநாடு செல்லவில்லை. இந்த நாட்டிலேயே உயர்கல்வி கற்றேன். நான் என் நாட்டுக்கு கடன்பட்டிருக்கிறேன். இந்த நாடு எனது கல்விக்காக செலவிட்டது. நான் றோயல் கல்லூரியை நேசிக்கிறேன்.
மேலும், உயர்கல்விக்காக பிரதமர் வெளிநாடு சென்றாலும், நாட்டுக்கான பொறுப்பையும், கடமையையும் மறக்கவில்லை. அதனால் உயர்கல்வியை முடிந்து நாடு திரும்பினார். அதைத்தான் நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும்.
நீங்கள் அனைவரும் இந்த பாடசாலையில் கல்விகற்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும் அந்த வாய்ப்பை இழந்த நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்களில் இருந்து இந்தப் பாடசாலை உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. எனவே, இந்த நாட்டிலிருந்து கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
றோயல் கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் அந்த சவாலை ஏற்கத் தயாரா? அதுதான் உங்களின் கடமை. உங்கள் அனைவருக்கும் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது. மற்றது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது. எங்களுக்கு இனம், மதம் என்று பிரிய முடியாது. றோயல் கல்லூரி அப்படிப் பிரிப்பதில்லை. நீங்கள் அனைவரும் உயர்கல்வி பெற்று இந்த நாட்டிற்குத் திரும்பி, உங்கள் சமூகப் பொறுப்பை ஏற்று, நாட்டின் எதிர்காலம் சிறக்க பங்களிக்க வேண்டும். நீங்கள் உயர் பதவியில் இருந்தாலும் அல்லது நீங்கள் சாதாரண தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், அதை நீங்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.
இந்த நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து போட்டி எண்ணங்களையும் மறந்து ஒன்றிணையுமாறு றோயல் கல்லூரியின் அனைத்து மாணவர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன். அரசியலில் ஈடுபடும் எவரையும் தமது அரசியல் பயணத்தை நிறுத்திவிட்டு என்னுடன் இணையுமாறு நான் கோரவில்லை. ஆனால் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வரை அனைத்து அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், விவசாயிகள், கல்வியலாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன், இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு பாதுகாப்புப் படையினர், பொலிஸார், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். இதுதான் நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டிய சவாலாகும்.
இந்த நிகழ்வில், வரவேற்புரையை றோயல் கல்லூரிஅதிபர் ஆர்.ஏ. ரத்நாயக்க மற்றும் நன்றி உரையை சிரேஷ்ட மாணவத் தலைவர் கவீஷ ரத்நாயக்க நிகழ்த்தினார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க, கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அனுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், கெவிது குமாரதுங்க, பிரியங்கர ஜயரத்ன, துமிந்த திஸாநாயக்க, மஹிந்தானந்த அலுத்கமகே, டிலான் பெரேரா, யதாமணி குணவர்தன, காவிந்த ஜயவர்தன, நிபுன ரணவக்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.