முதல் உளவு செயற்கைக்கோளை ஏவும் தமது முயற்சி தோல்வியடைந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

இந்த தகவல் வட கொரியாவின் மத்திய செய்தி நிறுவனத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

உளவு செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடலில் வீழ்ந்துள்ளது.

வட கொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்துவதாக அறிவித்ததால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

வட கொரியாவின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் ஏவப்படுவதை அடுத்து தென் கொரிய தலைநகர் சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், எதிர்பார்த்த சேதம் ஏற்படாததால், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

முன்னதாக வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவப்படும் தகவலுக்கு பதிலடி கொடுத்த ஜப்பான், தனது எல்லைக்குள் ராக்கெட் வந்தால் அதனை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.

நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வட கொரியாவிற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறியே வட கொரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முயற்சித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *