பாகிஸ்தான் மசூதியில் நேற்று (30) நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
தலிபான் பயங்கரவாதி நடத்திய இந்த தாக்குதலில் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெஷாவா் நகர மசூதியில் நேற்று (30) நண்பகல் வழக்கம் போல் தொழுகை நடந்து கொண்டிருந்தது.
பலத்த பாதுகாப்பு மிக்க பெஷாவா் பொலிஸார் தலைமையக வளாகத்திற்குள் அமைந்துள்ள அந்த மசூதியில், தொழுகை நடத்திக் கொண்டிருந்தவா்கள் இடையே தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை மதியம் வெடிக்கச் செய்தாா்.
இந்த தாக்குதலில் 46 போ் உயிரிழந்ததாக பெஷாவா் நகரிலுள்ள லேடி ரீடிங் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், நகர பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் பலி எண்ணிக்கை 38 என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தவிர, இந்த குண்டுவெடிப்பில் 150-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும், அவா்கள் லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதல் குறித்து ‘பாகிஸ்தான் தலிபான்கள்’ என்றழைக்கப்படும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பின் தளபதி உமா் காலித் குராசானி என்பவரின் சகோதரா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட நடவடிக்கையில் குராசானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே பெஷாவா் மசூதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினாா்.
தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதிகள், ஏற்கெனவே பல முறை பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, மசூதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 90 ஆக அதிகரித்துள்ளது.