மட்டக்களப்பு மாநகரத்தில் அமையவுள்ள மாபெரும் நவீன நூலகத்திற்கான புத்தகங்கள், ஆவண பதிவேடுகள், ஏட்டுச் சுவடிகள், பண்பாட்டு மரபுரிமை சாதனங்கள் போன்றவற்றையும் ஏனைய முக்கிய தேவையான விடயங்களையும் தேடி சேகரித்து ஒழுங்குபடுத்துவதற்கான திட்ட செயல்படுத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் தற்போதய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சருமான  சிவ.சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக செயல்பட்ட போது அரசியல், இனம், மதம், மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சிந்தித்து எமது மாகாணத்தில் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நீடித்த நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும், உலகமயமாக்கல், எதிர்கால சந்ததியின் நவீன சிந்தனைகள் போன்றவற்றை அறிந்து அதற்கேற்ப அவர்களின் வாழ்க்கை முறைகளையும், வாழ்வாதார நடவடிக்கைகளையும் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு அவர்களின் அறிவைப் பெருக்கக்கூடிய நவீன வசதிகளைக் கொண்ட முழுமையான நூலகம் ஒன்றை அமைக்க வேண்டியதன் அத்தியாவசியத்தினை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

அதன் விளைவாக உருவானதே இன்று மட்டக்களப்பு நகரில் உருப்பெறும் நூலக கட்டிட தொகுதியாகும் ஆனால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அதனை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்ய முடியாமல் போனது அனைவரும் அறிந்ததே. எனவே இச் சிந்தனைக்கு உருக்கொடுத்து குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கு உறுதுணையாக செயற்படக் கூடியவர்கள் எமது மாவட்டத்திலுள்ள பொதுநல நோக்கும், முற்போக்கு சிந்தனையும், ஆற்றலும், அனுபவமும் கொண்ட புத்திஜீவிகளே எமது மாவட்டத்தினதும் நூலகத்தினதும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்களாக மட்டக்களப்பை சேர்ந்த சில புத்திஜீவிகள் தாமாக முன் வந்ததன் அடிப்படையில் தலைவர் செயலாளர் ஆலோசகர்கள் உள்ளடங்கலாக மேற் கூறப்பட்ட குழு அமையப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே குறித்த குழுவினூடாக உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் குறிப்பாக தமிழ்நாடு போன்ற இடங்களில் செயல்படும் தனியார் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள், அமைப்புகள், இயக்கங்கள் என்பது போன்ற விபரங்களை அறிந்து அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி குறித்த பணியை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.

எனவே குறித்த நோக்கம் வலுப்பெற கிழக்கு மாகாணத்தினதும் மட்டக்களப்பு மாவட்டத்தினதும் வளர்ச்சி மீது அக்கறையும் கரிசனையும் கொண்டவர்கள் இவாறானதொரு புத்தகசாலையை எமது மண்ணில் அமைப்பதற்கு ஒத்துழைப்புடனும், பரஸ்பர நம்பிக்கையுடனும் செயற்பட்டு நீங்கள் படித்த சுவாரஷ்சியமான கருப்பொருள் நிறைந்த புத்தகங்களை இக்குழுவினூடாக வழங்கி குறித்த நூலகத்தை உயிரோட்டம் மிக்கதாக மாற்றும் உன்னத செயற்பாட்டில் பங்குதாரர்களாகும்படி தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் உங்களால் வழங்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் உங்கள் பெயர்பட்டியல்களுடன் இணைத்து நூலக திறப்புவிழாவின் போது காட்சிப்படுத்தப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

அந்தவகையில் குழுவின் தலைவராக .மு. பவளகாந்தன், செயலாளராக சா பரணீதரன் போன்றோரும் ஆலோசகர்களாக இஸ்டாலின் ஞானம், என். செல்வராஜா போன்றோரும் அங்கத்தவர்களாக கலாநிதி. து. பிரதீபன், ம. பிரகாஷ், பா. டயல் சிங்கம், ம. பவித்திரன், ஜோயல் ஜெருசன், ஜோ. லிபியன், கி. நவநீதன், டி. ஜனோபன், பொ. குவேதன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *