மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில்  ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

மேற்படி இலவச உணவு திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 15 ஆயிரம் சிறார்கள் பயன்பெறுவார்கள். அதன்பின்னர் ஏனையோரையும் உள்வாங்குவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு, உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கமைய, சுகாதார மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தோட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான முழுமையான பங்களிப்பை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் வழங்குகின்றது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் பட்டினி விகிதமும் அதிகரித்துள்ளது. மலையகத்தில் இந்நிலைமை மோசமாகவுள்ளது. அத்துடன், சிறார்கள் மத்தியில் போஷாக்கிண்மை பிரச்சினையும் காணப்படுகின்றது.

இவற்றை நிவர்த்தி செய்யும் ஓர் நடவடிக்கையாகவே அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, இலவச சத்துணவு வேலைத்திட்டம் சிறார்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி உட்பட சர்வதேச அமைப்புகள், மகளிர் விவகார மற்றும் சிறுவர் விவகார அமைச்சு உட்பட உள்நாட்டு ஸ்தாபனங்களையும் இணைத்துக்கொண்டு குறித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்று பிரஜா சக்தி அபிவிருத்தி திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் ஷான் அருள்சாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *