ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப்பின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று – 1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே நிலையான தொடக்கம் கொடுத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில், ஒரு சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் மொஹித் சர்மா பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடித்த போது டேவிட் மில்லரிடம் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு டேவன் கான்வேயுடன் இணைந்து ருதுராஜ் கெய்க்வாட் 10.3 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 3 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் நூர் அகமது பந்தில் போல்டானார். அஜிங்க்ய ரஹானே 10 பந்துகளில், 17 ரன்கள் எடுத்த நிலையில் தர்ஷன் நல்கண்டே பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக பேட் செய்த டேவன் கான்வே 34 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்து ஷமிபந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அம்பதி ராயுடு 9 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து வெளியேறினர். ரவீந்திர ஜடேஜா 16 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன், 22 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி பந்தில் போல்டானார்.

கேப்டன் தோனி 2 பந்துகளில் ஒரு ரன் எடுத்த நிலையில் மோஹித் சர்மா பந்தில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். மொயின் அலி 4 பந்துகளில் 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணி சார்பில் மொகமது ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். தர்ஷன் நல்கண்டே, ரஷித் கான், நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

173 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணியானது சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. ரித்திமான் சாஹா 12 ரன்னில் தீபக் சாஹர் பந்தில் வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்னில் தீக்சனா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். தசன் ஷனகா (17), டேவிட் மில்லர் (4) ஆகியோரை ஜடேஜா வெளியேற்றினார். நிதானமாக விளையாடிய ஷுப்மன் கில் 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் தீபக் சாஹர் பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையை நோக்கிய விளாசிய போது டேவன் கான்வேயிடம் கேட்ச் ஆனது.

ஒரு கட்டத்தில் 14 ஓவர்களில் குஜராத் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தது. 36 பந்துகளில் வெற்றிக்கு 78 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா களத்தில் இருந்தனர். தீக்சனா வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் டெவாட்டியா (3), ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதையடுத்து ரஷித் கான் களமிறங்கினார். இந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டன. பதிரனா வீசிய அடுத்த ஓவரில் ரஷித் கான் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விரட்ட 13 ரன்கள் கிடைத்தது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 17-வது ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸரையும் ரஷித் கான் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியும் விளாச குஜராத் அணிக்கு 19 ரன்கள் கிடைக்கப்பெற்றன. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவையாக இருந்தன. பதிரனா விசிய 18வது ஓவரின் 3-வது பந்தில் விஜய் சங்கர் (14) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் தர்ஷன் நல்கண்டே (0) ரன் அவுட் ஆனார். இந்த ஓவரில் பதிரனா 4 ரன்களை மட்டுமே வழங்கினார். இது திருப்புமுனையாக அமைந்தது.

12 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்பதால் குஜராத் அணிக்கு அழுத்தம் அதிகமானது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித் கான் 3வது பந்தை டீப் பாயிண்ட் திசையில் அடித்த போது டேவன் கான்வேயிடம் கேட்ச் ஆனது. ரஷித் கான் 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஷமி பவுண்டரி அடிக்க இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தன. பதிரான வீசிய கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்க்கப்ப்டட நிலையில் கடைசி பந்தில் மொகமது ஷமி (5) ஆட்டமிழந்தார். முடிவில் 20 ஓவர்களில் குஜராத் அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. நூர் அகமது 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த குஜராத் அணி வரும் 26ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் தகுதி சுற்று 2வது ஆட்டத்தில் பங்கேற்கும். இதில் வெற்றி பெற்றால் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே தரப்பில் தீபக் சாஹர், தீக்சனா, ஜடேஜா, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *