மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயசூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் நலன்கருதி குறுகிய காலப்பகுதிக்குள் நீர் கட்டண உயர்வை மீளக்குறைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மாத்தளை பிரதேசத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாத்தளை மாநகர மேயர் சந்தானம் பிரகாஷ் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிவஞானம் ஆகியோரின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு இன்று (19) குறித்த மாத்தளை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், கட்சி தலைவர்கள், அமைப்பாளர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் விரைவில் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும். ஏனெனில் பெரும்பாலான நீர்வழங்கல் திட்டங்கள் மின்சாரத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.  இதனால் நீர்வழங்கல் பொறிமுறைக்கான செலவீனங்களும் அதிகரிக்கும்.  அதனை ஈடுசெய்வதற்காகவே கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டு மக்கள் படும் கஷ்டமும் எமக்கு புரிகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பின்னர்,  சூரிய சக்திமூலம், நீர்வழங்கல் திட்டத்தை இயங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் செலவீனம் குறையும். நீர் கட்டணத்தையும் குறைக்ககூடியதாக இருக்கும்.

நாட்டில் கல்வி, சுகாதாரம் உட்பட இலவசமாக வழங்கப்படுகின்றன அத்தியாவசிய சேவைகளை எவ்வித தடையுமின்றி செயற்படுத்த வேண்டுமானால் அதற்கு அரசுக்கு வருமானம் அவசியம். இப்படியான நெருக்கடி நிலையால்தான் வரிகள் அதிகரிக்கப்படுகின்றன. எனவே ,நாட்டு நலன் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி குறிப்பிட்ட காலத்துக்குள் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டின் தற்போதைய நிலைமை நிலையானது அல்ல. நெருக்கடி நிலை மாறும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, 1000 ரூபா சம்பள உயர்வின் பின்னர், தொழிற்சங்கங்களுக்கும், கம்பனிகளுக்கும் இடையில் முரண்பாடு நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி முரண்பட்டு பயணிக்கவும் முடியாது. கூட்டு ஒப்பந்தத்துக்கு வருகின்றோம் என கூறும் கம்பனிகள், முதுகுக்கு பின்னால் வேறொன்றை செய்கின்றது. வழக்கு தொடுக்க முற்படுகின்றது.

 

அரசுடன் பேச்சு நடத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குவதற்கு கம்பனிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகின்றோம். இந்த வாய்ப்பை கம்பனிகள் தவறவிட்டால், நாம் சம்பள நிர்ணய சபைக்கு நிச்சயம் செல்வோம். 2 ஆயிரம் முதல் 2, 500 வரை சம்பள உயர்வு கோரப்படும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேர்தலுக்கு அஞ்சவில்லை.  உள்ளாட்சிசபைத் தேர்தல் அல்ல ஜனாதிபதி அல்லது பாராளுமன்ற தேர்தலே அவசியம். அதன்மூலமே மாற்றத்தை ஏற்படுத்தலாம். ” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *