அமெரிக்காவில் 2017 ஆண்டு முதல் 2021 வரை ஜனாதிபதியாக இருந்த டிரம்ப், 2016-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தன்னுடன் நெருக்கமான உறவில் இருந்ததாக பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார்.

இதை மறுத்த டிரம்ப், இது பற்றி மேலும் பேசாமல் இருக்க நடிகைக்கு, கட்சியின் பிரசார நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச நடிகைக்கு அவர் பணம் கொடுத்த விவகாரம் தற்போது பூதகரமாக வெடித்துள்ளது.

இந்த புகாரின் பேரில் டிரம்ப் மீது மன்ஹாட்டன் அரசு வழக்கறிஞர் கிரிமினல் வழக்குப் பதிவு செய்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு நடந்தால், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படுவது முதன் முறையாக இருக்கும். இந்த வழக்கில் டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்க அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவர் கட்டிடத்திற்கு வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் காவல்துறையின் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து காவலர்களும் முழு சீருடை அணிந்து பணியில் இருக்கவும், காவல்துறையின் ஒவ்வொரு அங்கத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *