மன்னாரில் குளியல் அறையிலிருந்து திருடப்பட்ட சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான குளியல் அறை உபகரணங்களுடன் இரு சந்தேக நபர்கள் மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டு களவாடப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் செவ்வாய் கிழமை (05) இடம்பெற்றுள்ளது.
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளிலிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இதன் உரிமையாளர்; மன்னார் பொலிசில் திங்கள் கிழமை (04) முறைப்பாடு செய்திருந்தார்.
இதையிட்டு குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான சந்தன பிரசாத் ஜெயதிலக்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக உப பொலிஸ் பரிசோதகர் நிப்பூன் தலைமையில் மன்னார் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்களான சிவராஜா (53207) முசாதிக் (62792)
மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான லியனகே (105297) ஹேரத் (105276) கருணாரத்ன (105221) ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதலில் இவ்பொருட்களும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் தாழ்வுபாடு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 58 வயதுகள் கொண்ட இரு சந்தேக நபர்கள்; செவ்வாய் கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்பொழுது இவ்விரு சந்தேக நபர்களும் மன்னார் பொலிசாரால் தீவிர விசாரனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் இவர்களையும் தடயப் பொருட்களையும் பொலிசார் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
(வாஸ் கூஞ்ஞ)