இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும், சர்வதேச ஊடகப் பயன்பாடு மற்றும் நலன்புரி நலன்கள் தொடர்பில் மேலும் வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான உப தலைவர் மார்ட்டின் ரேசர் (Martin Raiser) உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
உலக வங்கியின் அபிவிருத்திக் கொள்கை செயல்பாட்டுத் திட்டம் இங்கு முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டதோடு , அதன் முன்னேற்றம் குறித்து, ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
நிதி மேற்பார்வை மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், வரி நிர்வாகத்தை மேம்படுத்துதல், இறையாண்மை-நிதித்துறை இணைப்புகள் மற்றும் கட்டமைப்பு ரீதியிலான அபாயங்களைக் குறைத்தல், வங்கித் துறையில் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையைப் பேணுதல், மறுசீரமைப்பு மற்றும் பரவலாக்கம், கொள்கை ரீதியிலான நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தில் போட்டித்தன்மையை அதிகரித்தல், புரோட்பேண்ட் சந்தையில் தனியார் மூலதனம் மற்றும் போட்டியை வலுப்படுத்தல், சமூக பாதுகாப்பு நிறுவனம், விநியோகக் கட்டமைப்பு மற்றும் இலக்கு மயப்படுத்தலை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.