75 ஆவது சுதந்திர தின அரச விழாவின் செலவுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை

Share

Share

Share

Share

75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அரச விழாவைப் புறக்கணிக்குமாறு மக்களை கட்டாயப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போலிப் பிரச்சாரங்கள் குறுகிய அரசியல் செயல்முறையின் மற்றொரு தொடர்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது.

பொய்யான தகவல்கள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்தி, அரசாங்கத்தை மக்கள் வெறுக்கச் செய்வதும், அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதன் மூலம் அவர்களின் அரசியல் நலன்களை நிறைவேற்றுவதுமே இதன் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதற்காக, சுதந்திர தின விழாவின் போது நடமாடும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி கொடுத்தது கூடத் தவறு என்று மக்களை நம்ப வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், அழைப்பின் பேரில் உயர்மட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளான ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே (Takei Shunsuke), பூட்டானின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் ஜெய் பிர் ராய் (Jai Bir Rai), மற்றும் மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் (Abdulla Shahid) பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஏ.கே. அப்துல் மொமன் (A.K. Abdulla Momen) பாகிஸ்தான் வெளிவிவகார இணை அமைச்சர் ஹினா ரப்பானி கர் (Hina Rabbani Khar), இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் வி. முரளீதரன் (V. Muraleedharan), நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. பிமலா ராய் பௌத்யால் (Bimala Rai Paudyal), பொதுநலவாயத்தின் பொதுச் செயலாளர் பெட்றீசியா ஸ்கொட்லன்ட் (Patricia Scotland) ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட சுமார் 3200 உயர் அதிகாரிகளும் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 6670 உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும், சுதந்திர தின விழாவை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்காக இந்த நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் நிகழ்வில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உரிய முறையில் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, போதுமான நடமாடும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை தேவையற்ற செலவு என்று கூற முடியாது.

அதிகளவான மக்கள் கூடும் உத்தியோகபூர்வ அரச நிகழ்வில் இவ்வாறான ஒரு அம்சம் தொடர்பில் போதிய கவனம் செலுத்தாமை நாட்டுக்கே அவமானம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன், கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து 5.8 மில்லியன் ரூபாவை இந்த நிகழ்வுக்காக அரசாங்கம் செலவிட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது.

இந்த நிகழ்விற்கான ஆரம்ப செலவை கல்வி அமைச்சு மதிப்பிட்டிருந்த போதிலும், அந்த பணம் எதுவும் செலவிடப்படவில்லை.

தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் உத்தியோகபூர்வ அரச விழாவிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது பொதுவானதொரு விடயமாகும். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற 75ஆவது தேசிய சுதந்திர தின விழாவின் அதிகாரபூர்வ அரச விழாவிற்கு செலவிடப்பட்ட தொகையானது மதிப்பிடப்பட்ட தொகையை விடவும் மிகக் குறைவு என்பதை வலியுறுத்த வேண்டும்.

அதன்படி, இவ்வருடம் நடைபெற்ற 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவிற்கு அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 11,130,011 ரூபா 29 சதங்கள் மட்டுமே ஆகும்.

மேலும், கடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக அரசாங்கம் மிகக்குறைவாகவே செலவிட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வேளையில் இப்படி ஒரு அரச விழாவை நடத்துவது நாட்டை மீண்டும் எழுச்சி பெறத் தயார் செய்வதாகத் தெரிகிறது. மறுபுறம், இலங்கையை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு தேவையான துணிச்சல் இலங்கை அரசிடம் இருப்பதாகவும், நெருக்கடியால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பெருமையை மீட்டெடுக்க நாடு தயாராக உள்ளது என்பனவும் இந்நிகழ்வின் மூலம் உலகிற்குச் சொல்லும் செய்திகளாக அமைந்துள்ளன.

எனவே, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய சுதந்திர தினம் போன்ற பெருமைக்குரிய அரச நிகழ்வு தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரங்களை ஜனாதிபதி அலுவலகம் வருத்தத்துடன் நிராகரிக்கிறது.

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு